Primary Menu

பழனியில் தைப்பூச கொடியேற்றம் – பக்தர்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 15 ந்தேதி தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 20 ம் தேதி 6 ம் திருவிழாவாக திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் 21 ந்தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இலவச தங்குமிடங்கள், குளியலறை, கழிப்பறை, போன்ற வசதிகள் கோவில் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விபத்துக்களில் சிக்காமல் இருக்க அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பழனியில் கூடுதலாக நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பஸ் நிலையத்திலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய மாவட்ட நிர்வாகமும் , நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துவருகிறது.

திண்டுக்கல் சரக டிஐஜி ஜோஷிநிர்மல்குமார் பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவர் அடிவாரம் , கிரிவீதி, சன்னதிவீதி, அருள்ஜோதி வீதி, பூங்கா ரோடு, சுற்றுலா பயணிகள் பஸ் நிலையம், பழனி வ.உ.சி பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம், சண்முகநதி போன்ற பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். அவருடன் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் நாராயணன், பழனி போலீஸ் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையினர் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது டிஜஜி ஜோஷிநிர்மல்குமார் அதிகாரிகளிடம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு பாதவிநாயகர் கோவிலிருந்து வடக்கு கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையில் மலைக் கோவிலுக்கு செல்லவும். பின்னர் தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கி வருவதற்கு ஒருவழிப்பாதை ஏற்பாடு செய்ய அறிவுரை வழங்கினார். சன்னதிவீதி , கிரிவீதிகளில் வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், தீப்பற்றும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

shares